திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.8 சிக்கல் பண் - இந்தளம் |
வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகை
தேனுலா வுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்
வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி
ஞானமா கந்நினை வார்வினை யாயின நையுமே.
|
1 |
மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே
அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே.
|
2 |
நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய
சேலு மாலுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்
பால வண்ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே.
|
3 |
கந்தமுந் தக்கைதை பூத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற்
செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்
வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரையார்கழல்
சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.
|
4 |
மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு
தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்
வெங்கண்வெள் யேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே
தங்கு மேற்சர தந்திரு நாளுந்த கையுமே.
|
5 |
வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்
தெண்டிரைக் கொள்புனல் வந்தொழுகும் வயற் சிக்கலுள்
விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப்பி ரானடி
கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே.
|
6 |
முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழத்
துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்
செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே.
|
7 |
தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே
செற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை யாய்வினை யாயின ஓயவே.
|
8 |
மாலி னோடரு மாமறை வல்ல முனிவனுங்
கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியுஞ்
சீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான்
பாலும் பன்மலர் தூவப் பறையும்நம் பாவமே.
|
9 |
பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலாக்
கட்ட மண்கழுக் கள்சொல்லி னைக்கரு தாதுநீர்
சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறைப்
பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே.
|
10 |
கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல்
செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிச்
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை
வெந்த நீறணி யும்பெரு மானடி மேவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |